தேர்தல் 2021

சமக, ஐஜேகேயுடன் இன்று மநீம தொகுதி பங்கீடு நிறைவடையும்: மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர் தகவல்

செய்திப்பிரிவு

சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொது செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சியில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியை தங்களது கூட்டணிக்கு இழுக்க மக்கள் நீதி மய்யம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மாநில செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன், கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன், துணை பொதுச்செயலாளர் ரவிபாபு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாகிரதி ஆகியோர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். 3-வது முறையாக நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உடனான இறுதி கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டது. நாளை (இன்று) கமல்ஹாசன், சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகியோர் சந்தித்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுடனான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT