திருப்பூரில் பத்திரப் பதிவு மோசடி வழக்கில் தட்டச்சு அலுவலக ஊழியரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் பத்திரப் பதிவு மாவட்ட பதிவாளர் ராமசாமி, மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் ஏற்கெனவே அளித்திருந்த புகார் மனுவில், "திருப்பூர் இணை சார் பதிவாளர் எண் 1, எண் 2, தொட்டிபாளையம் சார் பதிவாளர், நல்லூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து அரசுக்கு செலுத்த வேண்டியபத்திரப் பதிவு தொகையை, கையாடல் செய்ததாக அந்தந்த சார் பதிவாளர்கள் புகார் அளித் துள்ளனர்.
மேற்கண்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் 47 பத்திரப் பதிவுக்கு பொதுமக்கள் அரசுக்கு இணையவழியில் கட்டிய ரூ.68 லட்சத்து 93 ஆயிரத்து 432-ஐ சார் பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், தனியார்ஒப்பந்த கணினி அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள் ஆகியோர் கூட்டு சதி செய்து கையாடல் செய்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின்பேரில், மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் சொர்ணவல்லி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்தனர்.
இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக இணை சார் பதிவாளர் எண்.1 அலுவலக உதவியாளராக இருந்த சங்கர் மற்றும் தட்டச்சு அலுவலகம் நடத்திவரும் ஜெய்சங்கர் ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த பிரகாஷ் (33) என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர்.
விசாரணையில், அப்பகுதியில் உள்ள பத்திரப் பதிவு சம்பந்தமான தட்டச்சு அலுவலகத்தில் உதவியாளராக பிரகாஷ் வேலை செய்து வந்துள்ளார். இவர், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சங்கருடன் படித்த நண்பர் ஆவார்.
தொட்டிபாளையம் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் பன்னீர்செல்வமும் இவருடன் சேர்ந்துள்ளார். இவர்கள் கூட்டு சேர்ந்து பத்திரப் பதிவின்போது பயன்படுத்தப்படும் ரசீதுகளில் உள்ள தொகைக்கு மறுபடியும் பயன்படுத்தக்கூடிய புதிய பதிவுகளை பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.