Regional01

தேர்தல் விதிமீறல் தொடர்பாக சட்ட நடவடிக்கை : திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தகவல்

செய்திப்பிரிவு

தேர்தல் விதிமீறல் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் மாளிகையில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். பொருளாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:

சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் அதிமுக-வினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 1.40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆட்சியருக்கு திமுக சார்பில் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடியில் இரவு நேரங்களில் உலா வரும் அரசு வாகனங்களில், அரசு ஊழியர்கள் அல்லாத தனியார் ஒட்டுநர்கள் காரை பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிப்பதில் அதிமுக-வினர் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, திமுக-வினர் வீடு வீடாகச் சென்று அவர்களிடம் கையெழுத்து பெறும்போது, விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம், கொடியரசி கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT