Regional01

சேலம் மாவட்டத்தில் - தேர்தல் பறக்கும் படை சோதனையை தீவிரப்படுத்த அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனை இடங்களை மாற்றி, தணிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தின் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள், தலா ஒரு வீடியோ கண்காணிப்புக் குழு என 77 குழுக்கள் அமைக்கப் பட்டன.

சட்ட விரோதப் பணப் பரிமாற்றம், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம், சட்ட விரோத மதுக்கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க சுழற்சி அடிப்படையில் 24 மணி நேர தொடர் கண்காணிப்புப் பணியில் பறக்கும் படையினர் உள்ளிட்ட கண்காணிப்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சட்டப்பேரவைத் தொகுதியின் எல்லைப் பகுதிகள், சுங்கச் சாவடி பகுதிகள், முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் உள்ளிட்ட கண்காணிப்புக் குழுக்கள் வாகனத் தணிக்கை உள்ளிட்ட கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு வாரம் கடந்த நிலை யில், சேலம் மாவட்டத்தில் உள்ள பல தொகுதிகளில் போதிய அளவு கண்காணிப்பு மேற்கொள்ளப் படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, பறக்கும் படையினர் உள்ளிட்ட கண் காணிப்புக் குழுவினர் ஒரே இடத்தில் தொடர் சோதனை மேற்கொள்ளாமல், வெவ்வேறு இடங்களில் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு உயர் அதிகாரிகள் கூறும்போது, “கண்காணிப்புக் குழுவினர் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முகாம் போல இருந்து செயல்படாமல், பரவலாக அனைத்து இடங்களிலும் திடீர் சோதனைகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இதன் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம், பரிசுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க முடியும்” என்றனர்.

SCROLL FOR NEXT