Regional02

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தவாறு - ‘12டி’படிவம் மூலம் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க அவர்களது வீடுகளுக்கே சென்று 12டி படிவம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்.2-ம் தேதி நடக்கிறது.கரோனா தொற்றால் 80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக வராமல் தபால் மூலம் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தபால் வாக்களிக்க விரும்பும்மேற்கண்ட நபர்கள் படிவம் 12 டி-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அவர்களது வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம்-12டி வழங்கப்பட உள்ளது.

இப்படிவத்தை பூர்த்தி செய்து, செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு மார்ச் 12 முதல் 16-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அலுவலர்கள் படிவத்தை பெற்றுக் கொள்வார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளன்று (மார்ச் 19) படிவம் 12டி-யில் உள்ள விவரங்களை சரிபார்த்து, அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து, தகுதியான நபர்களுக்கு அவரால் நியமனம் செய்யப்படும் குழு மூலம் தபால் வாக்கு வழங்குவார். தபால் வாக்கு அளித்த நபர்களின் பெயர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் எனத் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT