வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் சட்டப்பேரவை தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்த பயிற்சி காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து ஆலோசனைகளை வழங்கினார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், திட்ட இயக்குநர் மாலதி உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன். 
Regional02

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழக அண்ணா அரங்கில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் பணியாற்றும் 149 மண்டல அலுவலர்கள், 300 காவலர்களுக்கான தேர்தல் பணி குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தேர்தலில் 1,783 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.

கரோனா பரவலை தடுக்க வழங்கப்படும் 10 பொருட்களை எடுத்துச் சென்று எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவுக்கு முன்தினம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மாலதி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT