Regional01

ஈரோடு ஓங்காளியம்மன் கோயிலில் பொங்கல், குண்டம் திருவிழா :

செய்திப்பிரிவு

ஈரோடு ஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் உள்ள ஓங்காளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த 1-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 2-ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து வந்த பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 3-ம் தேதி அக்னி கபால ஊர்வலமும், 4-ம் தேதி விளக்கு பூஜையும், ஊஞ்சல் சேவையும் நடந்தது.

இதனையடுத்து நேற்று காலை 6 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காரை வாய்க்காலில் இருந்து கரகம் எடுத்து வந்த கோயில் பூசாரி ரஞ்சித், முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பெண்கள், சிறுவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். நேற்று இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார். இன்று (6-ம் தேதி) தெப்ப உற்ஸவமும், நாளை மறு அபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT