திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா பறக்கவிட்டார். 
Regional02

100 சதவீத வாக்குப்பதிவுக்காக - கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் : ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், நேற்று திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர், நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் 250-க்கும் மேற்பட்டவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, நாட்டுப்புற நாடக கலைஞர்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கலை நிகழ்ச்சிகளில், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கிராமிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிறகு, திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கவிட்டார்.

இந்த ராட்சத பலூனை பொதுமக்கள் அதிக அளவில் பார்வையிட்டு விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்.

மேலும், மதுரவாயல், அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி மையங்கள், வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கும் ஸ்ட்ராங்க் ரூம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா, அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவள்ளூர் வட்டாட்சியருமான செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT