Regional01

பறக்கும்படை சோதனையில் - ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ரூ.8.97 லட்சம் ரொக்கம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.97 லட்சம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பறக்கும் படைக் குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்பு மற்றும் கணக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கோபியில் ஆய்வு மேற்கொண்ட பறக்கும்படையினர், நம்பியூர் பேருந்து நிலையம் அருகில் உரிய ஆவணங்கள் இன்றி ஆர். பழனிசாமி என்பவர் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், பவானியில் கே.சந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.97 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில், லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்கள் தங்களது அதிகபட்ச பணப்பரிவர்த்தனைகளை நேரடியாக செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் அலுவலர்கள், பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT