Regional02

ஆம்பூர், வாணியம்பாடி, வேலூரில் - பணம், அப்பளக்கட்டு, தங்க வளையல்கள் பறிமுதல் : பறக்கும் படையினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புதூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான அப்பளக்கட்டுகள் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல, ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ் வழியாக வந்த ஆம்பூர் ஜவஹர்லால் தெருவைச் சேர்ந்த ராஜன் என்பவர் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணனிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.

வேலூர்

அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக வந்த காரை நிறுத்திசோதனையிட்டனர். அதில், காரில்இருந்தவர்களிடம் 6 ஜோடி தங்க வளையல்கள் இருந்தன. சுமார் 100 கிராம் எடை கொண்ட வளையல்கள் ரூ.4.25 லட்சம் மதிப்புடையது என தெரியவந்தது.

தங்க வளையல்களுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு துணை தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அந்த வளையல்கள் வேலூர் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT