கடந்த 2006-ல் 9, 2011-ல் 10, 2016-ல் 25 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிக 10 தொகுதிகள் கேட்ட நிலையில், திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
1989-ல் 'தலித் பாந்தர்' அமைப்பின் மாநில அமைப்பாளராக இருந்த திருமாவளவன், 1991-ல் இந்த அமைப்பை 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சி' என்று மாற்றினார். ஆரம்பத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டோம் என்று விசிக அறிவித்திருந்தது. ஆனால், 1999 மக்களவைத் தேர்தலில் ஜி.கே.மூப்பனார் அழைப்பை ஏற்று முதல் முதலாக தமாகாவுடன் கூட்டணி அமைத்து விசிக தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தது. முதல் தேர்தலிலேயே பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால் திருமாவளவன் முக்கிய அரசியல் சக்தியானார்.
2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் சட்டப்பேரவையில் நுழைந்தார். திமுக உறுப்பினராக சட்டப்பேரவையில் சுயேச்சையாக செயல்பட முடியவில்லை எனக் கூறி 2004-ல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் தான் ஒரு முக்கிய சக்தி என்பதை நிரூபித்தார்.
2006 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. காட்டுமன்னார்குடியில் டி.ரவிக்குமாரும், மங்களூரில் கு.செல்வப்பெருந்தகையும் வெற்றி பெற்றனர். ஆனால், 2006 உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட சிக்கலால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவுடன் கூட்டணி அமைத்தது. 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வென்றார்.
திமுக கூட்டணியில் 2011 பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும், 2014 மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலும் விசிக தோல்வி அடைந்தது. 2016 பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரத்தில் தனிச் சின்னத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வென்றனர்.
இந்நிலையில் வரும் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பது விசிகவின் நீண்ட நாள் கனவு. குறைந்தது 8 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்தான் மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைக்கும். போட்டியிடுவதே 6 தொகுதிகள் என்பதால் இந்தத் தேர்தலிலும் விசிகவின் கனவு நனவாகாத நிலை ஏற்பட்டுள்ளது.