தஞ்சாவூர் அருகே பணம் திருடியதாகக் கூறி இளைஞரை கொடூரமாக தாக்கி, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ம.கோவிந்தராவ் உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் அருகே பூண்டியைச் சேர்ந்தவர் ராகுல்(22). இவரை கடந்த பிப்.1-ம் தேதி கோணூரில் சிலர் பணம் திருடியதாகக் கூறி கம்பால் கொடூரமாக தாக்கி, அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் வைரலாக்கினர். இந்த வீடியோவை பிப்.4-ம் தேதி பார்த்த ராகுல் மன வேதனை அடைந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ராகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாரியம்மன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(26), வீரமணி(22), கோணூரைச் சேர்ந்த ராஜதுரை(26), லட்சுமணன்(24), குமிழக்குடியைச் சேர்ந்த சரத்குமார் (29), அருள்மொழிப்பேட்டை அய்யப்பன்(22) ஆகியோரை அம்மாபேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், டிஎஸ்பி ஆனந்த் பரிந்துரையின்பேரில், விக்னேஷ் உள்ளிட்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.