தேர்தல் 2021

திமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பு: நேற்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், கடந்த 2 நாள்களாக நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

நேற்று மாலை தொகுதிப் பங்கீடு பேச்சு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் திமுக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

இது தொடர்பாக திமுகவினரிடம் விசாரித்தபோது, "விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை குழுவில் இருப்பவர்கள் நேர்காணல் நடத்தும் குழுவிலும் இருப்பதால் நேற்று பேச்சு நடைபெறவில்லை" என்றனர்.

ஆனால், காங்கிரஸுக்கான தொகுதிகளை இறுதி செய்த பிறகே, இனி மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை உறுதி செய்ய திமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எதிர்பார்ப்பதை விட குறைவான தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்கிவிட்டால், அதையே காரணமாகக் கூறி மதிமுக, விசிக, இடதுசாரிகளுக்கு தலா ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கி உடன்பாடு செய்து விடலாம் என்று திமுக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT