சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 18 பறக்கும் படைகள், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள், ஒவ்வொரு தொகுதிக்கும் 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் என, மாவட்டத்தில் 48 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தொகுதிக்கு ஒன்று என, மொத்தம் 6 குழுக்கள் செயல்படுகின்றன.
நேற்று அதிகாலை 12.20 மணியளவில் டி.தனசிங் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் தூத்துக்குடி புறவழிச்சாலையில் மடத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி ஒருவரின் காரை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 2 அட்டைப்பெட்டிகளில் 90 கட்சி கரை வேட்டிகள் இருந்தன. அனுமதி இல்லாமல் கொண்டு சென்றதால் அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.