திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அனுகிரக மண்டபம், நாழிக்கிணறு செல்லும் நடைபாதை, நாழிக்கிணறு பேருந்து நிலையம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 84 கடைகள் செயல்படுவதற்கு அறநிலையத்துறை ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
18 கடைகள் அனுமதியில்லாமல் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அனுமதியில்லாத கடைகளை அப்புறப்படுத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்ற பின்னரும் மீண்டும் ஒரு முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனுமதியில் லாத கடைகளை அப்புறப்படுத்த கோயில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன், உதவி ஆணையர் செல்வராஜ், அலுவலக கண்காணிப்பாளர் கோமதி மற்றும் கோயில் பணியாளர்கள் நேற்று காலை வந்தனர்.
அப்போது அனுகிரக மண்டபத்தில் கடைகளை காலி செய்யஎதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பிரபாகரன் (38), ஆறுமுகநயினார் (39) ஆகியோர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து காத்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியில்லாத கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
நாழிக்கிணறு செல்லும் நடைபாதையில் ஜெயந்திநாதர் விடுதி அருகே தள்ளுவண்டி கடைகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது தள்ளுவண்டி கடை நடத்தும் பெண்கள், இந்த வியாபாரத்தை நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகிறோம் என, கண்ணீர் மல்க முறையிட்டனர். பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதாக செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.