2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| தங்க. கதிரவன் | அதிமுக |
| ஆளூர் ஷா நவாஸ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) | திமுக |
| ஆர்.சி.எம்.மஞ்சுளா சந்திரமோகன் | அமமுக |
| சையத் அனாஸ் | மக்கள் நீதி மய்யம் |
| ச.அகஸ்டின் அற்புதராஜ் | நாம் தமிழர் கட்சி |
மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவானதால் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் நாகை மாவட்டத்திற்குள் உள்ளது.
நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் 95,558 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 01 ஆயிரத்து 748 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி பிரச்சினைகள்
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடி தொழிலும், விவசாயமுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
மாவட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் பிரதானமாக உள்ளனர். எனவே இவர்களை முன்னுறுத்தியே தேர்தல் வாக்குறுதிகள் அமையும். நாகை துறைமுகத்தை சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து முனையமாக மாற்றும் வகையில், முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும். விவசாய கல்லூரி தொடங்க வேண்டும். திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். நாகூர் வெட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால கட்டுமான பணியை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். நாகை மீன் இறங்கு தளத்தில் மீன்களை பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும்.
நாகூர் ஆண்டவர் தர்கா, நாகை புதிய கடற்கரை ஆகியவற்றை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். நாகையில் இயங்கி வந்த ரயில்வே பணிமனை பொன்மலைக்கு மாற்றப்பட்டு விட்டதால் மாற்றுத் தொழில் உருவாக்க வேண்டும். குறிப்பாக விசைப்படகுகள் கட்டும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. இவற்றை எல்லாம் ஒவ்வொரு தேர்தலின்போதும் நிற்கும் வேட்பாளர்களும், ‘அமைக்கப்படும்’ என்றே தங்கள் வாக்குறுதி பட்டியலில் குறிப்பிட்டார்கள். ஆனால் மேற்கண்ட வாக்குறுதிகளுக்காக எந்த வேட்பாளரும் துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றார். பயணிகள் நிழலகம், கழிவறை, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம், சாலைகள் என்ற அளவில் தான் அவரது தொகுதி பணிகள் அமைந்துள்ளது. இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கைக்காக மாவட்ட ஆட்சியர், எம்பி என சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த தயங்கியதே இல்லை. மேலும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர்ந்து பேசியவர் என்பதை மறுக்க முடியாது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா 44,353 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 89,661 |
| பெண் | 93,386 |
| மூன்றாம் பாலினத்தவர் | 1 |
| மொத்த வாக்காளர்கள் | 1,83,048 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | எம். தமீம் அன்சாரி | அதிமுக - (மனிதநேய ஜனநாயக கட்சி) |
| 2 | ஏ.முகமது ஜபருல்லா | திமுக (மமக) |
| 3 | ஏ.பி.தமீம் அன்சாரி ஷாகிப் | இந்திய கம்யூ |
| 4 | கே.நேதாஜி | பா.ஜ.க |
| 5 | ஏ..பால்ராஜ் | பாமக |
| 6 | டி.நிறைந்தசெல்வம் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 2011 | கே. ஏ. ஜெயபால் | அதிமுக |
| 2006 | கோ.மாரிமுத்து | இகம்க(மா) |
| 2001 | ஜீவானந்தம் | அதிமுக |
| 1996 | நிஜாமுதீன் தே.லீக் | திமுக |
| 1991 | கோடிமாரி | அதிமுக |
| 1989 | கோ.வீரையன் | இகம்க(மா) |
| 1984 | கோ.வீரையன் | இகம்க(மா) |
| 1980 | உமாநாத் | இகம்க(மா) |
| 1977 | உமாநாத் | இகம்க(மா) |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | மாரிமுத்து.V | மார்க்சியக் கம்யூனிசக் கட்சி | 57315 |
| 2 | ஜெயபால்.K.A | அதிமுக | 54971 |
| 3 | மதியழகன் பெரு | தேமுதிக | 9949 |
| 4 | கார்த்திகேயன் S | பாஜக | 1758 |
| 5 | பஷீர்.S | தேசியவாத காங்கிரசு கட்சி | 655 |
| 6 | பன்னீர்செல்வம்.R | பகுஜன் சமாஜ் கட்சி | 412 |
| 125060 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | ஜெயபால்.K.A | அதிமுக | 61870 |
| 2 | முகமது ஷேக் தாவூத் | திமுக | 56127 |
| 3 | முருகானந்தம் | பாஜக | 1972 |
| 4 | ஜகபர் சாதிக் | பகுஜன் சமாஜ் கட்சி | 721 |
| 120690 |