2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| நாகேஷ் குமார் (பாஜக) | அதிமுக |
| ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) | திமுக |
| எம்.வி.சேகர் | அமமுக |
| அசோக்குமார் | மக்கள் நீதி மய்யம் |
| இரா.மேரி செல்வராணி | நாம் தமிழர் கட்சி |
தளி சட்டப்பேரவை தொகுதியில் தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி வட்டம் ஆகிய இரண்டு வட்டங்களும், அவற்றில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி ஆகிய 4 வனச்சரகங்களும் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களில் வாழும் அரிய வகை பட்டியலில் உள்ள வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு “காவேரி வடக்கு வனஉயிரின சரணாலயம்” அமைந்திருப்பது வனம் சார்ந்த தளி தொகுதியின் சிறப்பாகும்.
தளி தொகுதி, 1977-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை உத்தனப்பள்ளி தொகுதியில் ஒரு அங்கமாக தளி இருந்து வந்தது. பின்பு தொகுதி மறுசீரமைப்பில் உத்தனப்பள்ளி தொகுதி நீக்கப்பட்டு 1977-ல் தளி தொகுதி உதயமானது.
அடர்ந்த வனமும், வானூயர்ந்த மலைகளும் சூழ்ந்த இயற்கை வளமிக்க தொகுதியாக தளி உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 900மி.மீ. மழை பொழிவுடன் தளி பெரிய ஏரி உட்பட நூற்றுக்கணக்கான ஏரிகள் சூழ்ந்துள்ளதாலும், சுமார் 60 கி.மீ நீளத்துக்கு தளி தொகுதியை ஒட்டி காவிரி ஆறு ஓடுவதாலும், இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இதனால் தளி,ஆங்கிலேயர் காலம் தொட்டு “குட்டி இங்கிலாந்து” என்று அழைக்கப்பட்டு வருகிறது. விவசாயம் இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது.
இப்பகுதி மக்களின் முக்கிய உணவாக கேழ்வரகு உள்ளதால், ஆண்டுதோறும் மானாவாரியில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது. அதேபோல சுமார் 15ஆயிரம் ஹெக்டரில் மலைப்பயிர்களான காலிப்பிளவர், கேரட், பீட்ரூட் ஆகிய காய்கறிகள் பயிரிடப்பட்டு,சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் மற்றும் பெங்களூரு, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு செல்கிறது.
அதேபோல இங்கு மலர் உற்பத்தியும் சிறப்பாக உள்ளது. குளுமையான தட்பவெட்ப நிலை மற்றும் மண்வளத்தை பயன்படுத்தி சுமார் 1500 விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்து மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பசுமைக்குடில்களில் சொட்டுநீர் பாசனம் மூலமாக உயர் விளைச்சல் தரக்கூடிய உலக தரம்மிக்க ரோஜா, கார்னேசன், ஜெர்பரா உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் தளி தொகுதிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இங்கு மத்திய அரசால் 2017-ம் ஆண்டு இந்தியா - இஸ்ரேல் கொய்மலர் மகத்துவ மையம் தொடங்கப்பட்டு, புதிய தொழில் நுட்பத்தில் ரோஜா உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.
பெரும்பான்மை சமுதாயம்
தளி தொகுதியில் 40 சதவீதம் அளவுக்கு கன்னடம் மொழி பேசும் கவுடா வாக்காளர்கள் நிறைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தெலுங்கு பேசும் ரெட்டி, நாயுடு மக்களும், 3-வது இடத்தில் தமிழ் பேசும் மக்களும் உள்ளனர். மேலும் மலைவாழ் பழங்குடியின மக்கள், எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பினர், முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
தளி தொகுதி மலை கிராம மக்களிடையே கல்வி வளர்ச்சி 20 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. மலைக்கிராமங்களில் இயங்கும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் இடைநிற்றல் அதிகளவில் காணப்படுகிறது.உயர் கல்வி இப்பகுதி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி செல்ல பேருந்து வசதியின்றியும், குடும்ப வறுமை காரணமாகவும் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு கூலிவேலைக்கு சென்று விடுகின்றனர். கல்வி விழிப்புணர்வில்லாத இப்பகுதி மலைவாழ் மக்களிடையே குழந்தை திருமண முறை இன்றளவும் தொடர்கிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் -
தளி தொகுதியில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய இரண்டு தேர்வுநிலை பேரூராட்சிகளும், தளி, அஞ்செட்டி, ஜவளகிரி, நாட்றாம்பாளையம், மாடக்கல், பேளகொண்டப்பள்ளி, பைரமங்கலம், மதகொண்டப்பள்ளி, உரிகம், கும்ளாபுரம், கெம்பட்டி, உளிமாரனப்பள்ளி, தொட்டஉப்பனூர், நொகனூர், தக்கட்டி, பெட்டமுகிலாளம், தொட்டமஞ்சி, அகலக்கோட்டை உட்பட50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அடங்கியுள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள் -
இன்றைய நவீன காலகட்டத்திலும் பழமை மாறாத மலைக்கிராமங்களை கொண்டுள்ள தளி தொகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாக தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட நகரப்பகுதி அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர போதிய அளவில் பேருந்து வசதி இல்லை. இதுவும் மாணவர்கள் பள்ளியில் இருந்து இடைநிற்க ஒரு காரணமாக உள்ளதால் பேருந்து வசதியை அதிகப்படுத்த வேண்டும்.
கோடையில் குடிநீருக்காக மலைப்பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றி வரும் இப்பகுதி பெண்கள், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். இங்குள்ள மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். மலைக்கிராமங்களில் சாலை மற்றும் தெருவிளக்கு வசதியை மேம்படுத்த வேண்டும். தளி பெரிய ஏரியில் செயல்படாமல் உள்ள படகு இல்லம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.
தளி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தளியில் நவீன மருத்துவ கருவிகள் வசதிகளுடன் பல்நோக்கு அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள வாக்காளர்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
கட்சிகளின் வெற்றி -
கடந்த 1977-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், ஜனதா கட்சி, பாஜக, சுயேட்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,26,968 |
| பெண் | 1,19,770 |
| மூன்றாம் பாலினத்தவர் | 15 |
| மொத்த வாக்காளர்கள் | 2,46,753 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | சி.நாகேஷ் | அதிமுக |
| 2 | ஒய்.பிரகாஷ் | திமுக |
| 3 | டி.ராமச்சந்திரன் | இ.கம்யுனிஸ்ட் |
| 4 | டி.அருண்ராஜன் | பாமக |
| 5 | பி.ராமச்சந்திரன் | பாஜக |
| 6 | செ.தமிழ்செல்வன் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2006 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1977 | டி. ஆர். இராமசந்திர ரெட்டி | காங்கிரஸ் | 18559 | 30.53 |
| 1980 | டி. ஆர். இராஜாராம் நாயுடு | காங்கிரஸ் | 25558 | 41.53 |
| 1984 | கே. வி. வேணுகோபால் | காங்கிரஸ் | 36441 | 49.05 |
| 1989 | டி. சி. விஜயேந்திரய்யா | ஜனதா கட்சி | 39773 | 45.96 |
| 1991 | எம். வெங்கட்ராமரெட்டி | காங்கிரஸ் | 38831 | 345.88 |
| 1996 | எஸ். இராஜா ரெட்டி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 26427 | 28.78 |
| 2001 | கே. வி. முரளீதரன் | பாஜக | 36738 | 38.33 |
| 2006 | டி. இராமச்சந்திரன் | சுயேச்சை | 30032 | --- |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1977 | பி. வெங்கிடசாமி | ஜனதா கட்சி | 13388 | 22.02 |
| 1980 | டி. ஆர். விஜயேந்திரய்யா | ஜனதா கட்சி | 22601 | 36.72 |
| 1984 | டி. சி. விஜயேந்திரய்யா | ஜனதா கட்சி | 34017 | 45.79 |
| 1989 | கே. வி. வேணுகோபால் | காங்கிரசு | 18810 | 21.74 |
| 1991 | வி. இரங்கா ரெட்டி | பாஜக | 28270 | 33.41 |
| 1996 | வெங்கட்ராமரெட்டி | காங்கிரஸ் | 18938 | 20.63 |
| 2001 | எஸ். இராஜா ரெட்டி | இ பொ க | 30521 | 31.84 |
| 2006 | பி. நாகராஜ ரெட்டி | இ பொ க | 25437 | --- |
| 2006 சட்டமன்ற தேர்தல் | 56. தளி | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | T. ராமச்சந்திரன் | சுயேச்சை | 30032 |
| 2 | P. நாகராஜா ரெட்டி | சி.பி.ஐ | 25437 |
| 3 | N.S.M. கோடா | ஜே.டி | 23628 |
| 4 | Y. புட்டன்னா | சுயேச்சை | 20196 |
| 5 | K.V. முரளிதரன் | பி.ஜே.பி | 12912 |
| 6 | V. ஹரி | தே.மு.தி.க | 5356 |
| 7 | V. விந்தை வேந்தன் | சுயேச்சை | 3032 |
| 8 | R. முனிராஜ் | பி.எஸ்.பி | 1761 |
| 9 | M. சகுலன் | சுயேட்சை | 1534 |
| மொத்தம் | 123888 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2011 சட்டமன்ற தேர்தல் | 56. தளி | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | T. ராமச்சந்திரன் | சி.பி.ஐ | 74353 |
| 2 | Y. பிரகாஷ் | தி.மு.க | 67918 |
| 3 | K.S. நரேந்திரன் | பி.ஜே.பி | 4727 |
| 4 | F. அயாஸ் | சுயேச்சை | 2847 |
| 5 | C. முனிராஜ் | சுயேச்சை | 2376 |
| 6 | R. நாசிருதின் | பி.எஸ்.பி | 1960 |
| 7 | K. கிருஷ்ணப்பா | சுயேச்சை | 1057 |