பழைமைவாய்ந்த கோவை மாநகராட்சி கட்டிடம் 
கோயம்புத்தூர்

120 - கோயம்புத்தூர் (தெற்கு)

செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
வானதி சீனிவாசன் (பாஜக) அதிமுக
மயூரா எஸ்.ஜெயக்குமார் (காங்கிரஸ்) திமுக
துரைசாமி (எ) ஆர்.சேலஞ்சர் துரை அமமுக
கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம்
அ.அப்துல் வகாப் நாம் தமிழர் கட்சி

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று கோவை தெற்கு. தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில், 120-வது இடத்தில் கோவை தெற்கு தொகுதி உள்ளது. கோவை மக்களவை தொகுதியில் இந்த தொகுதி அமைந்துள்ளது. கோவை மேற்கு, கோவை கிழக்கு என அழைக்கப்பட்டு வந்த தொகுதிகளை , தொகுதி மறுசீரமைப்பு செய்த பின்னர் அவை, கோவை தெற்கு என அழைக்கப்பட்டு வருகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

மாநகராட்சியின் 22, 25, 50, 51, 52, 54, 67, 68, 69, 70, 71, 72, 73, 80, 81, 82, 83, 84, 85 ஆகிய வார்டுகள் இத்தொகுதியில் உள்ளன. ராஜவீதி, பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, உக்கடம், ரயில் நிலையம் சாலை, ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், காந்திபுரம் குறுக்கு வீதிகள், விரிவாக்கப் பகுதிகள், சுங்கம், ரெட் பீல்ட்ஸ், அரசினர் விருந்தினர் மாளிகை சாலை, உப்பிலிபாளையம், நேரு மைதானம், பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகள் கோவை தெற்கு தொகுதியில் உள்ளன.

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில், பழமை வாய்ந்த சிவன் ஆலயமான கோட்டை ஈஸ்வரன் கோயில் ஆகியவை இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.

தவிர, கோவை மாநகராட்சியின் அடையாளமாக கருதப்படும் 1892-ம் ஆண்டு கட்டப்பட்ட மாநகராட்சி மன்றக் கூட்டம் நடக்கும் ‘விக்டோரியா அரங்கம்’ மற்றும் ‘நகர் மண்டபம்’ கட்டிடம் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது. மேற்கண்டவை இந்தத் தொகுதியின் முக்கிய அடையாளங்களாக கருதப்பபடுகின்றன. இந்த தொகுதி மட்டுமல்லாமல், கோவையின் முக்கிய அடையாளங்களாகவும் இவை உள்ளன.

இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மேற்கு மண்டல ஐஜி அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய சிறைச்சாலை, பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், மாநகராட்சி பிரதான அலுவலகம், மாநகராட்சி வடக்கு மற்றும் மத்திய மண்டல அலுவலகங்கள், மாவட்ட தீயணைப்பு அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய அரசுத்துறைகளின் அலுவலகங்கள் இந்தத் தொகுதியில் உள்ளன.

தவிர, மாவட்ட தலைமை ரயில் நிலையமான கோவை ரயில் நிலையம், காந்திபுரம் நகர மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்கள், தொலைதூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் திருவள்ளுவர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் ஆகியவை இந்தத் தொகுதியில் உள்ளன. நகரின் முக்கிய வர்த்தகப் பகுதிகளான காந்திபுரம், நஞ்சப்பா சாலை, உக்கடம், ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, ரயில் நிலையம் சாலை போன்றவையும் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.

மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமான வஉசி உயிரியல் பூங்காவும் இந்தத் தொகுதியில் தான் அமைந்துள்ளது. முழுமையாக மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது இந்த தொகுதி. கோவை தெற்கு தாலுக்காவும் இந்தத் தொகுதியில் தான் அமைந்துள்ளன. இத்தொகுதியில் பெரும் சதவீதம் இந்து சமய மக்கள் உள்ளனர். அதேசமயம், இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஜெயின் சமூகத்தினர் உள்ளிட்டோரும் குறிப்பிட்ட சதவீதம் வசிக்கின்றனர்.

கோரிக்கைகள்:

மாவட்டத்தில் உள்ள ஒரே உயிரியல் பூங்காவான, கோவை வஉசி உயிரியல் பூங்கா மேம்படுத்தப்பட்டு, காட்டில் காணப்படும் விலங்கினங்கள் இங்கு பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மாநகராட்சியின் அறிவிப்பு கடந்த ஐந்தாண்டுகளை கடந்தும் நிறைவேறாமல் இழுபறியாகிக் கொண்டு இருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரியகடைவீதி, ரயில் நிலையம் சாலை, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மாற்றுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் உள்ளன.

முன்பு இருந்ததை விட, அரசு மருத்துவமனை தற்போது மேம்படுத்தப்பட்டாலும், நோயாளிகளின் உறவினர்கள் தங்க இடமின்றி, மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு இடங்களில் தங்கி காத்திருப்பது தொடர்கிறது. முறையாக திட்டமிடாமல், பலவிதப் பணிகளுக்காக அடிக்கடி சாலைகள் தோண்டுவது,அவற்றை விரைவாக சீரமைக்காமல் தாமதப்படுத்துவது, பல்வேறு இடங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கிக் காணப்படுவது போன்றவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இத்தொகுதிக்குட்பட்ட பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்டவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம், குளங்கள் மேம்பாட்டுப் பணி, மாதிரிச் சாலை திட்டப்பணி உள்ளிட்டவற்றுக்கு பல கோடி முதலீடுகளும் ஒரு தரப்பு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. கட்டிடக் கழிவுகளை அழிக்கும் மறுசுழற்சி மையம் அமைத்தல், டவுன்ஹால் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பல அடுக்கு வாகனம் நிறுத்தகம் கட்டும் திட்டம் தாமதம் ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணி தாமதம், மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம், லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை சரி செய்ய எந்த நடவடிக்கையும் முழுமையாக எடுக்கப்பட வில்லை. அதேசமயம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நஞ்சப்பா சாலை உயர் மட்டப் பாலம், ஆகியவை இத்தொகுதிக்கு கிடைத்துள்ள வசதிகள் ஆகும்.

தேர்தல் வரலாறு

கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் நடந்த முதல் தேர்தலில், அதிமுக வேட்பாளர் சேலஞ்சர் துரை என்ற துரைசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி தோல்வியைத் தழுவினார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில், மாநகராட்சி கவுன்சிலராகவும், பணிகள் குழுவின் தலைவராகவும் இருந்த அம்மன் கே.அர்ஜூனன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் 59,788 வாக்குகளை பெற்றார்.

அதன் பின்னர், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக அம்மன் கே.அர்ஜூனன் உயர்ந்தார். இவரை எதிர்த்து காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் போட்டியிட்டு 42,369 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,22,691

பெண்

1,22,510

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,45,207

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

அம்மன் கே.அர்ஜூணன்

அதிமுக

2

மயூரா எஸ்.ஜெயகுமார்

காங்கிரஸ்

3

சி.பத்மநாபன்

மார்க்சிஸ்ட்

4

கி.பழனிசாமி.

பாமக

5

வானதி சீனிவாசன்

பாஜக

6

பி.பெஞ்சமின் ப்ராங்க்ளின்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

துரைசாமி.R (எ) சேலஞ்சர் துரை

அதிமுக

80637

2

பொங்கலூர் பழனிசாமி.N

திமுக

52841

3

நந்தகுமார்.C.R

பாஜக

5177

4

விஜய் ஆனந்த்.M

லோக் சட்ட கட்சி

1765

5

ஈஸ்வரன்.G.R

இந்திய ஜனநாயக கட்சி

573

6

முஹம்மத் அனீஸ்.M.L

சுயேச்சை

384

7

கோவிந்தராஜ்.B

பகுஜன் சமாஜ் கட்சி

333

8

சரவணன்.N

சுயேச்சை

324

9

லாசர்.T

சுயேச்சை

313

10

ரவி.C (எ) ரவி தேவேந்திரன்

தமிழக முன்னேற்றக் கழகம்

259

11

போகலூர் பழனிசாமி.S

சுயேச்சை

251

12

முருகன்.M

சுயேச்சை

177

13

பாபுராஜன்.R

சுயேச்சை

158

14

சிவராஜ்.V

சுயேச்சை

102

143294

SCROLL FOR NEXT