சேலத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க சேலம் மாவட்டத்தில் 77 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு, தொகுதி வாரியாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்க்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை மூன்றாவது குழுவைச் சேர்ந்த பிரபாகரன், சாஜிதா பேகம் தலைமையிலான அதிகாரிகள் கந்தம்பட்டி பை-பாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 கிலோ 80 கிராம் எடையுள்ள முலாம் பூசாமல் கொண்டு சென்ற ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், வெள்ளிக் கொலுசை எடுத்து வந்தவர் தளவாய்ப்பட்டி ஏழுமலை என்பதும், அவர் வெள்ளிக் கொலுசு உற்பத்தி தொழில் செய்து வருவதும் சிவதாபுரத்துக்கு வெள்ளிக் கொலுசை மெருகேற்ற எடுத்து சென்றது தெரியவந்தது.