சேலம்-விருத்தாசலம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணியில் பிரத்யேக ரயில் மூலம் உயர்மட்ட மின்சார கேபிள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது, அப்பணியில் உயர்மட்ட மின்சார கேபிள்கள பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது:
சேலம்- விருத்தாசலம், விருத்தாசலம்-கடலூர் வரை அகல ரயில்பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், விருத்தாசலம்- கடலூர் இடையிலான பாதையில் மின் மயமாக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
சேலம்-விருத்தாசலம் பாதையில் வழிநெடுக மின் கம்பங்களை நடுதல், ஆத்தூர், ஏத்தாப்பூர் ரோடு, மின்னாம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் எஸ்எஸ்டி எனப்படும் சிறிய மின் நிலையங்கள் அமைத்தல், தலைவாசலில் டிஎஸ்எஸ் எனப்படும் பெரிய மின் நிலையம் அமைத்தல் உள்ளிட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, மின்பாதைக்காக அமைக்கப்பட்ட மின் கம்பங்களில் உயர் மட்ட மின்சார கேபிள்களை பொருத்தும் பணி பிரத்யேக ரயிலைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக விருத்தாசலம்- ஆத்தூர் இடையே 70 சதவீதமும், சேலம்- ஆத்தூர் வரை 90 சதவீதமும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் வரும் 3 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு கூறினர்.