நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த ராகுல்காந்திக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன் வெள்ளி செங்கோல் நினைவு பரிசாக வழங்கினார். 
Regional02

தமிழகத்தில் மக்களை மதிக்கக் கூடிய ஆட்சி தேவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விருப்பம்

செய்திப்பிரிவு

"தமிழகத்தில் மக்களை மதிக்கக் கூடிய ஆட்சி தேவை” என்று, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டையில் வாகனத்தில் இருந்தபடி மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

காமராஜர் பிறந்த மாநிலத்துக்கு வந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர்தான் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் ஏற்படுத்தினார். தமிழக முதல்வரின் செயல்பாட்டால் மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். அவர் மோடியை கேள்வி கேட்பதற்கு பதிலாக அவரிடம் சரண்டர் ஆகிவிட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுகள், சிபிஐக்கு பயந்து, தன்னை பாதுகாத்துக் கொள்ள மோடி சொல்படி நடக்கிறார். மக்களை மதிக்கக் கூடிய ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் முனைவோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பின்னர், புளியங்குடியில் சிறு வியாபாரிகள், பீடித் தொழிலா ளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து கடையநல்லூர், தென்காசியில் பிரச்சாரம் செய்த அவர், இரவில் பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கினார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

உற்சாக வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மேளதாளம் முழங்க, கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அப்போது அவருக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை துறை இணை ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்பி முரளிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT