திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் குண்டடம் அரசு மாதிரிப் பள்ளியில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் பொங்கலூர் அறிவியல் நிலையம் சார்பில், ஊட்டச்சத்து தோட்டத்தை மாணவ, மாணவியர்களிடையே பிரபலப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் சி.பொன்னையன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையம், 2019-ம் ஆண்டிலிருந்து பல்வேறு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயத்தின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்களிடம் உணர்த்துவதோடு, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல் குறித்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். அதன்படி, திட்டத்தின் தொடக்க விழா, குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் பேசும்போது, "ஊட்டச்சத்தும், ஆரோக்கியமும் வாழ்வில் இணை பிரியாத விஷயங்கள். இன்றைய மாணவர்கள் சத்தான உணவை உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குண்டடம் ஒன்றியத்திலுள்ள 120 அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக ஊட்டச்சத்து தோட்டம் அமைத்து, மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்து பயனடையும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க குழந்தைகளுக்கு பல்வேறு இடுபொருட்கள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள், கீரை விதைகள் மற்றும் எடைபோடும் கருவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநர் (பொறுப்பு) ரவிக்குமார் தியோடர், மாநில வளர்ச்சி கொள்கை குழுமத் தலைவர் கு.ரா.ஜெகன்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.