மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டியில் மேட்டூர் அணையின் உபரிநீரை 100 வறண்ட ஏரிகளுக்கு நீர் ஏற்றம் மூலம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் பொன்னையன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் மணிவாசகன், ஆட்சியர் ராமன், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்எல்ஏக்கள் செம்மலை, வெற்றிவேல் உள்ளிட்டோர். படம்: எஸ்.குருபிரசாத் 
TNadu

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் மேட்டூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

‘தமிழகத்தில் விவசாயிகளுக்கு வரும் ஏப். 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு ரூ.565 கோடி திட்ட மதிப்பீட்டில் நீரேற்று மூலம் வழங்கும் திட்ட தொடக்க விழாநடந்தது. விழாவுக்கு ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி 100 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பொன்னையன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் மணிவாசகன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்எல்ஏ-க்கள் செம்மலை, வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்துக்காக நிலம் எடுப்பது சவாலாக இருந்தது. வறண்ட பகுதிகள் பாசன வசதி பெறும் வகையில் நீர் நிரப்பும் திட்டம் என்பதால், விவசாயிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தாங்களாக முன்வந்து நிலம் வழங்கினர்.

இந்தத் திட்டம் மிகப்பெரிய திட்டம். வறண்ட பகுதியில் பாசன வசதி ஏற்படுத்த வேண்டி, உபரி நீரை நிரப்ப வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் வேளாண் பெருமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி ஏரிகளுக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு அரை டிஎம்சி வெள்ள உபரிநீரை திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து 30 நாட்களுக்கு தினம் தோறும் விநாடிக்கு 214 கன அடிவீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பாதிப்பை கருத்தில் கொண்டு ரூ.12 ஆயிரத்து 110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 11 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைகின்றனர். 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர்க் கடன் ரத்து செய்து, வரலாற்று சாதனையை எங்கள் அரசு செய்துள்ளது.

மும்முனை மின்சாரம்

தமிழக அரசின் சார்பில் வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவில் வரலாற்றில் முதல்முறையாக நடப்பு ஆண்டில் 32 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல், அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வீடு இல்லாமல் இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14 ஆயிரத்து400 கோடி மதிப்பில் செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று கல்லணை கால்வாய் திட்டம், காவிரி உபரி நீர் திட்டம், கீழ்பவானி திட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT