திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. குறைந்த அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைநிறுத்தம் தொடங்கிய முதல் நாளில் ஓரளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று 20 சதவீதம் அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
திருநெல்வேலியில் தாமிரபரணி பணிமனையில் உள்ள 56 பேருந்துகளில் 11 பேருந்துகளும், கேடிசி நகர் பணிமனையில் 70-ல் 12 பேருந்துகளும், புறவழிச்சாலை பணிமனையில் 69-ல் 15 பேருந்துகளும் என்று 20 சதவீதம் அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன. அதிகமான போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராத நிலையில் ஐஆர்டி பாலிடெக்னிக் பயிற்சி பள்ளியில் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஓட்டுநர்கள், அண்ணா தொழிற் சங்கத்தினர், வாடகை கார் ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குறைந்த அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இலவச பேருந்து பயண அட்டையில் பயணித்து கல்லூரிகள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து கிடைக்காமல் திண்டாடினர். பலமணிநேரம் பேருந்து நிறுத்தங்களில் அவர்கள் காத்திருந்தனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பேருந்து நிலையங்களிலும், பணிமனைகளிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், அந்தந்த பணிமனைகள்முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 303 அரசு பேருந்துகள் உள்ளன. இதில் முதல் நாளான நேற்று முன்தினம் 94 பேருந்துகள் (31 சதவீதம்) இயங்கின. 2-ம் நாளான நேற்று கூடுதலாக 25 பேருந்துகள் இயங்கின. தற்காலிக ஊழியர்கள் சுமார் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 119 பேருந்துகள் (39 சதவீதம்) இயங்கின. 61 சதவீத பேருந்துகள் இயங்காமல் பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.
குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டதால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி கிடந்தன. வெளியூர் செல்வதற்காகவும், பணி நிமித்தமாக வந்தவர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
கன்னியாகுமரி