சசிகலா சிறையில் இருந்து விடுதலையானது முதல் தமிழக அரசியல் களத்திலும், அதிமுக முகாமிலும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. சசிகலாவை வரவேற்று, போஸ்டர் ஒட்டி ஆதரவு தெரிவித்த அதிமுகநிர்வாகிகளை ஈபிஎஸ்-ஓபிஎஸ்கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். அதேநேரத்தில், ஒரு சிலஅமைச்சர்களைத் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் இதுவரை சசிகலாவை விமர்சிக்கவில்லை. அவர் பற்றிய கேள்விகளுக்குக்கூட பதில் அளிக்காமல் தவிர்க்கின்றனர். அதனால், அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கூட வெளிப்படையாக அறிய முடியவில்லை.
இதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சசிகலா சிறைக்குச் சென்ற நாள் முதல்தற்போது வரை மறந்தும்கூட விமர்சிக்காதவர். வெளிப்படையாக பொதுவெளியில் ‘சின்னம்மா’ என பேசி வருகிறவர். இந்நிலையில், அவரது புகைப்படத்தை போட்டு ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும், ‘‘ஒன்றிணைவோம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாக பொது எதிரி, திமுகவை விரட்டியடிப்போம்...சபதமேற்போம்,’ என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் அதிமுகவினர்இடையே மட்டுமல்லாது அமமுகவினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி ‘ஒன்றிணைவோம் ஒரு தாய்வயிற்றுப்பிள்ளைகளாக,’ என்று அதிமுக, அமமுக இணைப்பை மறைமுகமாக விரும்புவதாக குறிப்பிடுகிறார்களா? அதில் செல்லூர் கே.ராஜூவுக்கும் விருப்பமுள்ளதா? என்பது தெரியாமல் மதுரை மாநகர அதிமுகவினர் குழம்பிப்போய் உள்ளனர்.
ஏற்கெனவே துணை முதல்வருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கும்பகோணத்தில் நடந்த அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் ‘அதிமுகவுக்கு இந்த தேர்தல் வாழ்வா, சாவா போராட்டம், அனைவரும் ஒன்றுபட்டால்தான் வெற்றிபெற முடியும், ’ என பேசியுள்ளார். அவர் சசிகலாவையும், அதிமுக, அமமுக இணைப்பையும் மனதில் வைத்துப் பேசினாரா? என்று பரப்பாக பேசப்பட்டது.
இப்படி இந்நாள், முன்னாள்அமைச்சர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்லாமல் சூசகமாகப் பேசி வருவது அதிமுக, அமமுக இணைப்பு அவசியம் என்பதை அதிமுக தலைமைக்கு உணர்த்துவதாக உள்ளது என தொண்டர்கள் தெரிவித்தனர்.