திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம், திருவாரூர் அருகேயுள்ள சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு, ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்து பேசியது:
8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன என்றார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் கொ.வீரராகவராவ், முகாமை தொடங்கிவைத்து பேசியதாவது: இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசு இந்த முகாமை நடத்துகிறது. அதுமட்டுமின்றி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம், போட்டித் தேர்வுகளுக்கு முறையான வகுப்புகளை இலவசமாக நடத்தி, இளைஞர்கள் தேர்வில் வெற்றி பெற அரசு உறுதுணையாக செயல்படுகிறது என்றார்.
இந்த முகாமில் 5,632 பேர் வேலை கேட்டு விண்ணப்பித்தனர். இவர்களில், 1,238 நபர்களுக்கு உடனடி பணிநியமனம், 602 நபர்கள் முதற்கட்டத் தேர்வில் தேர்வு என இம்முகாம் வாயிலாக 1,840 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்நிகழ்வில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல இணை இயக்குநர் மு.சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வி.சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.