கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் காணி நில வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்கலைக் கழகத்தின் மகாகவி பாரதியார் உயராய்வு மைய இயக்குநர் சி.சித்ரா தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் திருவையாறு பாரதி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம் ஆகியவற்றின் சார்பில், மகாகவி பாரதியார் குறித்த இலவச அஞ்சல் வழி சான்றிதழ் படிப்புக்கான பாரதியார் பாடங்கள் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு, பாரதி இயக்க அறங்காவலர் இரா.மோகன் தலைமை வகித்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழக மகாகவி பாரதியார் உயராய்வு மைய இயக்குநர் சி.சித்ரா நூலை வெளியிட, தஞ்சை லட்சுமி ரவி பெற்றுக்கொண்டார்.
பின்னர், சித்ரா பேசியதாவது: பாரதி இயக்கம் செயல்படுத்தி வரும் இலவச அஞ்சல் கல்வித் திட்டத்தில் வயது வரம்பின்றி அனைத்து வயதினரும் பங்குபெறலாம் என்பது பாராட்டுக்குரியது. ஓராண்டு காலத்துக்கு நடத்தப்படும் இந்தப் பாடத்திட்டத்தின் நிறைவில், இதில் முழுமையாகப்பங்குபெற்று ஒவ்வொரு பாடத்திலும் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்தப் பணியில் திருவை யாறு பாரதி இயக்கத்துடன், கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்படும்.
பாரதியார் வாழ்ந்த காலத்தில்,அவர் ஈரோட்டில் கருங்கல்பாளையம் நூலகத்துக்கு வந்து சொற்பொழிவாற்றி உள்ளார். ஆனால், அவர் ஆயுள் காலத்தில் வந்திராத கோவை மாநகரில், அவரது நினைவை போற்றும் வகையில், அவரது பெயரில் பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
பாரதியார் தனது கவிதையொன்றில், ‘காணி நிலம் வேண்டும்' என்றுபாடியிருப்பார். அதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பாரதி விரும்பிய காணி நிலம் என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அரசு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காணி நில வளாகத்தை அமைத்து, அந்தப் பாடலில் பாரதி குறிப்பிட்டபடி மாளிகையைக் கட்டி, அங்கு கேணிஅருகில் தென்னை மரங்கள் வளர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் பாரதியின் சிலை, நூலகம், கூட்ட அரங்கம் ஆகியவை பாரதி விரும்பியதைப் போன்ற சூழலில் அமைக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக, அரசு நிலம் ஒதுக்கீடு செய்து, முதல் கட்டமாக ரூ. 2.50 கோடியும் அனுமதித்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நூலை எழுதிய தஞ்சை வெ.கோபாலன் ஏற்புரையாற்றினார். திருவையாறு பாரதி இயக்க அஞ்சல் வழிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.