Regional02

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப்போல தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்துவோம் மாநில துணைச் செயலர் தகவல்

செய்திப்பிரிவு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப்போல 41 தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுகவை வலியுறுத்துவோம் என்று தேமுதிக மாநில துணைச் செயலர் பார்த்தசாரதி கூறினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைச் செயலர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறும்போது, "வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. எனினும், கடந்த தேர்தலைப்போல இம்முறையும் 41 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்துவோம்.

அமமுகவுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்பது வதந்தி. அதிமுகவுடன்தான் எங்கள் கூட்டணி. நான்கு வருடங்களுக்குப் பின் சசிகலா தமிழகம் வந்துள்ளார். அவர் ஒரு பெண் என்பதால்தான் வரவேற்றோம்.

மற்றபடி அமமுகவுடன் கூட்டணிவைக்கமாட்டோம்" என்றார். கூட்டத்தில், தேர்தல் பணிக்குழு செயலர் சிங்கை கே.சந்துரு, மாவட்டச் செயலர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT