தமிழகத்தில் திருவிழா, தேர்தல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் எங்கு நடந்தாலும் சம்பந்தப்பட்ட கட்சித் தொண்டர்களுக்குத் தெரிவதற்கு முன்பே பொரி, கடலை, சுண்டல் வியாபாரிகளுக்குத் தெரிந்துவிடும். அந்த அளவுக்கு அவர்கள் திருவிழாக்களையும், கட்சி நிகழ்ச்சிகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சிகளை அவர்கள் தங்களது முக்கிய வியாபார இடமாகக் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது தேர்தல் திருவிழா தொடங்கி உள்ளது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பொரி, சுண்டல்,கடலை வியாபாரிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். தலைவர்கள் வருவதற்கு முன்பே தொண்டர்கள் வந்து விடுவார்கள். தலைவர்கள் வந்து பேச ஆரம்பிக்கக் குறைந்தது 2, 3 மணி நேரங்கள் ஆகிவிடும். அதன் பிறகு கூட்டம் நிறைவு பெற 2 மணி நேரங்கள் ஆகும். அதுவரை தொண்டர்கள் பசியைப் போக்க சிறு வியாபாரிகளிடம் சுண்டல், பொரி, கடலை உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு நேரத்தை செலவிடுவர்.
ஆனால் இந்த சிறு வியாபாரிகள் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்துக்கு மட்டும் செல்ல முடியவில்லை. அதற்குக் காரணம், ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் ‘ஐபேக்’ நிறுவனம்தான் என்கின்றனர் திமுகவினர்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மேடை அமைப்பு முதல் கூட்டத்தில் எத்தனை நாற்காலிகள் போட வேண்டும், கூட்டத்துக்கு மத்தியில் விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளம் மீது ஸ்டாலின் நடந்து சென்று தொண்டர்கள், மக்களை சந்திப்பது, கலந்துரையாடலில் குறைகளை சொல்லும் பொதுமக்கள் யார், யாரிடம் பேச வேண்டும் என்பது வரை ‘ஐபேக்’ நிறுவன ஊழியர்களே தீர்மானிக்கின்றனர்.
அவர்கள் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்ட வளாகத்தில் சுண்டல், கடலை வியாபாரிகள் வருவதற்குத் தடை விதித்துள்ளனர். ஸ்டாலின் விழா மேடைக்கு வருவதற்கு இரண்டு வழிகளை மட்டுமே ஒதுக்குகின்றனர். அவ்வழியே தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ‘ஐபேக்’ நிறுவன ஊழியர்களைக் கடந்து சுண்டல், கடலை வியாபாரிகள் உள்ளே செல்ல முடியவில்லை.
அதனால் மதுரை ஒத்தக்கடையில் பிப்.17-ல் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்கு வந்த பொரி, சுண்டல், கடலை வியாபாரிகள் உள்ளே செல்ல முடியாமல் கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியே வியாபாரம் செய்தனர். ஸ்டாலின் வரத் தாமதமானதால், கூட்டம் நடந்த இடத்தில் நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்கள் குடிக்கத் தண்ணீரும், சாப்பிடுவதற்குப் பொரி, சுண்டல், கடலையும் இல்லாமல் பொறுமையிழந்தனர்.
அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் ஸ்டாலின் பேச ஆரம்பித்ததும் கலைந்து செல்லத் தொடங்கியதுக்கு இதுவும் ஒரு காரணம் எனத் திமுகவினரே கூறினர்.