தமிழக மக்கள் சசிகலாவை வரவேற்கவில்லை. அமமுகவினர் மட்டுமே வரவேற்றனர் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
திருப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அரசு அலுவலக கோப்புகளில் ஆங்கிலம் கலக்காமல், தமிழ்மொழி பயன்படுத்த வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசைப் பாராட்டுகிறேன். தமிழில் கையெழுத்திடுவதாகவும், தமிழ்மொழியில் பேசுவதாகவும் தமிழர்கள் அனைவரும் தாய்மொழி தினத்தில் (பிப்.21) உறுதியேற்க வேண்டும்.
பாஜக-அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டது என்பதை உணர்த்துவதற்காகத்தான், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கைகளை பிரதமர் மோடி உயர்த்திக்காண்பித்தார். தமிழக மக்கள் சசிகலாவை வரவேற்கவில்லை. அமமுக கட்சியினர் மட்டுமே வரவேற்றனர். அதிமுக- அமமுகபிரச்சினை குறித்து வேறு கட்சிகள் கருத்து தெரிவிக்க முடியாது.
கட்சி தொடங்குவது குறித்து,தனது இயலாமையை வெளிப்படையாகத் தெரிவித்ததற்காக நடிகர் ரஜினிகாந்தைப் பாராட்டுகிறேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நியாயமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி விட்டுச்சென்ற கடனை அடைப்பதற்காக, மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே முதல்வராக நாராயணசாமி நீடிப்பார். இதற்கும், பாஜகவுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.