தேர்தல் 2021

பாஜகதான் அதிமுக வீழ்ச்சிக்கு காரணம்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

செய்திப்பிரிவு

‘‘அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணமே பாஜகதான். பாஜக இல்லாவிட்டால் கணிசமான வாக்குகளை அதிமுக பெற முடியும்’’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ராகுல் காந்தி வரும் 27, 28 மற்றும் மார்ச் 1-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 டாலர். ஆனால், அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 54 டாலர். ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 100 ரூபாய்க்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுவிட்டார். இதுதான் ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசம்.

அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணமே பாஜகதான். பாஜக இல்லாவிட்டால் அதிமுக கணிசமான வாக்குகளைப் பெற முடியும். அந்த கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்து, வரும் 24-ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பேசப்படும்.

புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசை கடந்த 4 ஆண்டுகளாக செயல்படவிடாமல் மோடி அரசு தடுத்து வந்தது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டதால், விழித்துக் கொண்ட மத்திய அரசு, உடனடியாக கிரண்பேடியை நீக்கியது. புதுச்சேரியில் மக்கள் செல்வாக்குடன் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT