Regional01

தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டன.

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக சேலம் மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தெரு நாய்களை பாதுகாப்பாக பிடித்து வந்து, சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வாய்க்கால் பட்டறையில் உள்ள நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் ஆண்டி ராபிஸ் தடுப்பூசி செலுத்தி 7 நாட்கள் பராமரிக்கப்பட்டு, கருத்தடை செய்த விலங்கு என அடையாளமிடப்பட்டு நாய்கள் பிடித்த இடத்தில் விடப்பட்டன.

இப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறும்போது, “நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் மாதம் ஒன்றுக்கு 300 நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இச்சிகிச்சையை கேர் டிரஸ்ட் தொண்டு நிறுவன கால்நடை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்து வருகின்றனர்” என்றார்.

ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சண்முகவடிவேல், சுகாதார அலுவலர்கள் மாணிக்கவாசகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT