தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 32 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் பயிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் சென்று விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், மனித கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு உதவியாக தமிழக அரசு ரூ.34.56 லட்சம் மதிப்பில் 32 இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு வழங்கியுள்ளது. இந்த புதிய இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கி ,கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் தலைமையில் மோட்டார் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், அந்தோணி ராபிஸ்டன் கென்னடி, தலைமைக் காவலர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.