செவ்வாய் கிரகத்தில் பழங்காலத் தில் உயிரினங்கள் இருந்ததா என்பது தொடர்பான ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலையில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் நேற்று முன்தினம் பத்திரமாக தரையிறங்கியது.
இந்த செய்தியை நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவரும், விஞ்ஞானியுமான ஸ்வாதி மோகன் உறுதி செய்தார்.
இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர். விண்வெளி ஆய்வில் முதுநிலை பட்டப் படிப்புடன், டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
நாசாவில் பணியை தொடங்கிய ஸ்வாதி கடந்த 2013-ம் ஆண்டில் இருந்த பெர்சிவரன்ஸ் ரோவர் திட்டத்தில் இணைந்தார். மார்ஸ் 2020 விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் எல்லைக்குள் நுழையசெல்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
இதுகுறித்து ஸ்வாதி மோகன் கூறும்போது, “"எனக்கு இயற்பியலில் எல்லாமே எளிதாக புரிந்தது, நல்ல ஆசிரியர் கிடைத்தது என் அதிர்ஷ்டம். பிரபஞ்சத்தின் புதிய மற்றும் அழகிய பகுதிகளைக் கண்டறிய விரும்பினேன்" என்றார்.
செவ்வாய் கிரகத்தில் விண் கலத்தை தரையிறக்கி சாதனை படைத்துள்ள பெண் விஞ்ஞானி ஸ்வாதிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.