தேர்தல் 2021

மாநாடு நடத்த திண்டாடும் அரசியல் கட்சிகள்: கூட்டம் கலைந்ததால் கம்யூனிஸ்ட்கள் அதிர்ச்சி

எஸ்.ஸ்ரீனிவாசகன்

30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தல் திருவிழாக்களில் வெறும் டீயைக் குடித்துக் கொண்டே நாள்முழுவதும் நோட்டீஸ் விநியோகிப்பது, சுவர்களில் விளம்பரம் செய்வது, தெருக்களில் கொடியைப் பிடித்தபடி வீடு வீடாகவாக்குச் சேகரிப்பது என கட்சித் தொண்டர்கள் ஏதோ தங்கள் வீட்டு விசேஷம் போல பம்பரமாகச் சுற்றி வருவர்.

தங்கள் ஆதர்சத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், ஏதோ தங்கள் குடும்பத்தில் ஒருவரே ஆட்சியைப் பிடித்து விட்டதைப் போல புளகாங்கிதம் அடைந்து, உறவினர்களை அழைத்து கிடாய் விருந்து வைத்து மகிழ்வர்.

தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசனைப்படி நடக்கும் அரசியல் கட்சி மாநாடுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றம் வந்து விட்டது.

டிவி ரியாலிட்டி ஷோ, சினிமா படப்பிடிப்பு போல கட்சிக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. பல இடங்களில் கூட்டம் நடந்தாலும் பந்தல், மேடை, நுழைவுவாயில் என அனைத்து ஏற்பாடுகளும் அச்சு அசலாகஒரே வார்ப்பாக உள்ளன. எவ்வளவு பேரைத் திரட்ட வேண்டுமோ அதற்கேற்றவாறு திட்டமிடுதலும் கச்சிதமாக நடக்கிறது.

இப்படி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தாலும், பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் அழைத்து வரப்படுவோர் நிகழ்ச்சி முழுவதும் பங்கேற்கின்றனரா என்றால் அதுதான் இல்லை.

பலர் விழாப் பந்தலுக்குள்ளேயே போகாமல் வளாகத்தில் நின்றபடியும், வாகனங்களில் இருந்து இறங்காமலும் கூட்டக் கணக்கில் சேர்ந்து விடுகின்றனர். இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகளில் ஈடுபாடு இல்லாதவர்களையும் கூட்டத்தைக் காட்ட அழைத்து வருவதே காரணம். இதில் எந்தக் கட்சி கூட்டம், தலைவர்கள் யார் என்பது தெரியாமலேயே பலர் மாநாடுக்கு வருகின்றனர். இப்போதெல்லாம் முக்கியத் தலைவர் பேசி முடித்து புறப்படும் முன்பாகவே மொத்த திடலும் வெறிச்சோடி விடுகிறது.

இதனால் பல ஆயிரம் பேர் திரண்டாலும் சில நூறு பேரை விழாப் பந்தலில் அமர வைத்து கூட்டத்தை முடிப்பதற்குள் கட்சி நிர்வாகிகள் திண்டாடி விடுகின்றனர்.

மதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஸ்டாலின் மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்கள் வரை பந்தல் வெறிச்சோடி இருந்தது. கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மைதானத்துக்கு வெளியிலேயே சுற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து கோபமடைந்த பி.மூர்த்தி எம்எல்ஏ. நிர்வாகிகளை கடிந்து கொண்டார். அதன் பிறகே, கூட்டத்தை திரட்டி சிரமப்பட்டு பந்தலுக்குள் அமர வைத்தனர்.

பிரதான கட்சிகளுக்குத்தான் இந்த நிலைஎன்றால் கம்யூனிஸ்ட்களும் இதே நெருக்கடியை எதிர்கொண்டனர். மதுரையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து திரளானோர் வந்திருந்தனர். மாலை 5 மணிக்கு இருக்கையில் அமர்ந்தவர்கள், 7 மணி ஆனதும் பலரும்எழுந்து மைதானத்தைச் சுற்றி வரத் தொடங்கினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி முடித்தபோது 8 மணி ஆனது. அப்போதே பல இருக்கைகள் காலியாகி விட்டன.

இதைப் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அதிருப்தி அடைந்து, ‘பிரியாணி, மதுபாட்டில், ரூ.300-க்கு அழைத்து வரப்பட்ட கூட்டமல்ல இது. தங்கள் சொந்த செலவில் வந்த செம்படை' என்றார்.

எனினும் இரவு 9.30 மணிக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியபோது 20 சதவீதம் பேர் தான் இருந்தனர். கூட்டணிக் கட்சி தலைவர்களே பேசியதும் உடனடியாக புறப்பட்டுச் சென்றதால் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

போராட்டங்களில் கூட்டம் சேர்ப்பது, நிகழ்ச்சிகளை கட்டுக்கோப்பாக நடத்துவதில் கில்லாடிகளான கம்யூனிஸ்டுகளே மாநாடு நடத்த திணறியது, சமீபத்திய தேர்தல் திருவிழாவின் போக்கு முற்றிலும் மாறிவிட்டதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

SCROLL FOR NEXT