தேர்தல் 2021

மகளிர், இளைஞர், இளம்பெண்களை உற்சாகப்படுத்தும் முதல்வர் பழனிசாமி

கி.கணேஷ்

தமிழகத்தில் 6 - வது கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, மாவட்டங்கள்தோறும், மகளிர், இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர், ஐடி அணியினர் என பல்வேறு பிரிவினரை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துவதுடன், அரசின் திட்டங்களை பிரபலப்படுத்த அறிவுறுத்தி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி கடந்த டிசம்பர் மாதமே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். சேலம் மாவட்டத்தில் தனது தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், தற்போது 6 - வது கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அத்துடன், தினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி, விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு, குடியுரிமை சட்டத்திருத்தத்தின்போது போடப்பட்ட வழக்குகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து என பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையில், மாவட்டம்தோறும் அதிமுக மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையினர், ஐடி பிரிவினர் என பல்வேறு அணியினரையும் சந்தித்து பேசி வருகிறார்.

குறிப்பாக, திமுகவின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் உங்கள் பிரச்சாரம் இருக்க வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள், அதன்பின் தற்போது 4 ஆண்டுகளாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அவர்களிடம் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறும்போது,‘‘இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறையினர் மத்தியில் முதல்வர் பழனிசாமி பேசி வருவது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், புதிய நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் முதல்வரை சந்திக்க இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. இளைஞர், இளம்பெண்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட ஐடி பிரிவினருடன் இணைந்து தேர்தல் பணியாற்றும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT