விழுப்புரம் சரகத்தின் 29- வது டிஐஜியாக எம். பாண்டியன் நேற்று பொறுப்பேற்றார்.
விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி வகித்த கே. எழிலரசன் சென்னை போக்குவரத்து துணைஆணையராகவும், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்த எம். பாண்டியன் விழுப்புரம் சரக டிஐஜியாகவும் பணிமாறுதல் செய்து கடந்த 17-ம் தேதி கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று விழுப்புரம் சரகத்தின் 29- வது டிஐஜியாக எம். பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டம், ஒழுங்கை முழுமையாக கடைபிடிக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுப்பதிலும் முழு கவனம் செலுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர். எம்எஸ்சி (தாவரவியல்), பி. எட்,பிஎச்டி படித்துள்ளார் . 1998-ம்ஆண்டு டிஎஸ்பியாக பதவியேற்றார். சென்னை அண்ணாநகர், கீழ்பாக்கம் துணை ஆணையராகவும், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் எஸ்பியாகவும் பதவி வகித்தவர்.