Regional01

சேலம் அருகே சுத்தியால் அடித்து மகள் கொலை மாடியில் இருந்து குதித்து தந்தையும் தற்கொலை

செய்திப்பிரிவு

சேலம் அருகே மகளை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள தாதாபுரம் மணியகாரம்பாளையம் ஆதிகாட்டூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கோபால் (54). இவரது மனைவி மணி (50). இவர்களது மகன் ரமேஷ்கண்ணன் (18), மகள் பிரியா (15). கோபாலின் மனைவி வெளியூர்களுக்கு சென்று கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் செல்வார். மகன் ரமேஷ்கண்ணன் செட்டிமாங்குறிச்சியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். மகள் பிரியா தாதாபுரம் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக கோபால் மன நிலை பாதித்த நிலையில், மகன், மகளை கொன்றுவிட்டதாகவும், தான் மாடியில் இருந்து குதிப்பதாகவும் கூறி வந்துள்ளார். இதனையடுத்து, கோபாலை மருத்துவ சிகிச்சையில் அனுமதித்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். கோபாலின் மனைவி ஈரோடுக்கு கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சென்று விட்டார்.

மகன் ரமேஷ்கண்ணன் பேக்கரி வேலைக்கு சென்று விட்டு, தாத்தா வீட்டில் தங்கியுள்ளார். நேற்று அதிகாலை (19-ம் தேதி) கோபால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் வழிந்த நிலையில் அருகில் உள்ள தம்பி சுந்தர்ராஜ் வீட்டுக்கு ஓடிச் சென்று, மகள் பிரியாவை சுத்தியால் அடித்துக் கொன்று விட்டதாக கூறியுள்ளார். தம்பி மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கோபால் மாடி ஏறி சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீஸார் சம்பவ இடம் வந்து தந்தை, மகள் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT