தஞ்சாவூரில் பெயின்டரை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தஞ்சாவூர் அரண்மனை அருகேயுள்ள மானோஜியப்பா வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் சங்கர்(39), பெயின்டர். மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி அருகேயுள்ள கனகசபை நகரைச் சேர்ந்தவர் சசிகுமார்(46). நண்பர்களான இவர்கள் இரு வரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு, சசிகுமாரின் கால் உடைந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 20.7.2018 அன்று எதிர்பாராதவிதமாக சந்தித்துக்கொண்ட இருவரும், சசி குமாரின் வீட்டுக்குச் சென்று மது அருந்தினர். அப்போது, விபத்து தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட் டது. இதில், சசிகுமார் கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த சங்கர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சசிகுமாரை மருத்துவக் கல்லூரி போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சசி குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சங்கரின் குடும் பத்துக்கு உரிய இழப்பீட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுமம் பெற்றுத்தர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.