Regional01

அம்பை, களக்காட்டில் வனவிலங்குகளால் நெல், வாழை சேதம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், களக்காடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில், வனவிலங்குகளால் நெல் மற்றும் வாழைப் பயிர்கள் பெருமளவுக்கு சேதப்படுத்தப்படுவதால், ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா காரணமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நேரடி யாக நடத்தப்பட்டது. ஆட்சியர் வே.விஷ்ணு பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால் 33 சதவீதத்துக்குமேல் பாதிக்கப்பட்ட 163.05 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்த 482 விவசாயிகளுக்கும், 33 சதவீதத்துக்குமேல் பாதிக்கப்பட்ட 5,839.75 ஹெக்டேர் பரப்பளவில் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்த 5,727 விவசாயிகளுக்கும், 33 சதவீதத்துக்குமேல் பாதிக்கப்பட்ட 34.49 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்த 135 விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க அரசுக்கு பிரேரணை அனுப்பப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள். படம்: மு.லெட்சுமி அருண்.அதன்பேரில் 458 நெல் விவசாயிகளுக்கு ரூ. 31,42,820, பயறுவகைகள் பயிரிட்ட 5,340 விவசாயிகளுக்கு ரூ. 5,45,10,700 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

நெல் கொள்முதல் நிலையம்

ஆட்சியர் கூறும்போது, `தற்போது 29 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வரும் வாரத்தில் 11 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன’ என்று கூறினார்.

விவசாய பிரதிநிதி பி.பெரும் படையார் பேசும்போது, `அம்பா சமுத்திரம், களக்காடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

குறிப்பாக நெல், வாழை அதிகம் பாதிக்கப்படுகிறது. வனத் துறையினர் எவ்வித நடவடிக் கையும் எடுப்பதில்லை. மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வனவிலங்குகளை விரட்டுவதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

`விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் இறந்துகிடந்தால் அந்த விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதில் வனத்துறையினர் அக்கறை காட்டுகிறார்களே தவிர, வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்கி யிருப்பதுபோல், தமிழகத்திலும் நீக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் களக்காடு பகுதி களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுவதால் அங்கு குளிர்பதன கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT