திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே திமுக பிரமுகர் செல்லத்துரை (40) கொலை வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகி புரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இடப்பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
வடக்குஅரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன், ராதாகிருஷ்ணன், முத்துகுமார், மாரியப்பன், ஆதிமூலம், கணேசன் ஆகிய 6 பேரை, முக்கூடல் போலீஸார் தேடி வருகிறார்கள். செல்லத்துரை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் முக்கூடல்- திருநெல்வேலி சாலையில் அமர்ந்து நேற்று மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்கப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல் வேலிக்கு செல்லவேண்டிய பேருந்துகள் வீரவநல்லூர், ஆலங்குளம் வழியாக இயக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பிரதீப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை அடுத்து, அரைமணி நேரத்துக்கு மேலாக நீடித்த மறியல் கைவிடப்பட்டது.