அரியலூரில் நேற்று மாவட்ட சமூக நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.
அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன், பள்ளிப் படிப்பு முடித்த 223 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.55.75 லட்சம், பட்டப்படிப்பு முடித்த 436 ஏழை பெண்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2.18 கோடி என 659 ஏழை பெண்களுக்கு ரூ.2.73 கோடி நிதியுதவியும், தலா 8 கிராம் வீதம் 5,272 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பு வரன் முறைத் திட்டத்தின் கீழ் 804 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களுக்கான ஆணைகளையும், 105 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகைக் கான ஆணைகளையும், காவல் துறை, மாவட்ட தொழில் மையம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறைகளில் பணியாற்றி இறந்த நபர்களின் வாரிசுகளான 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் சந்திரசேகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாவித்ரி, ஒன்றியக்குழுத் தலைவர் செந்தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.