10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை துணை ஆட்சியர் பணியிடம் மற்றும் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பணியிடங்களை உருவாக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் பணியாற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதனால், ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி கூறியபோது, “தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் 585 ஊழியர்களில், 324 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். 36 பேர் விடுப்பில் உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.
நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதையன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் 376 ஊழியர்களில், 368 பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், பெரும்பான்மையான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், கரூர், குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகங்கள், கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம், புகழூர் ஆகிய 7 வட்டாட்சியர் அலுவலகங்களைச் சேர்ந்த 210 வருவாய்த் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.
தொடர்ந்து, கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் ஜெயவேல் காந்தன், பொருளாளர் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பாரதி வளவன் தலைமையில், 77 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.