தேர்தல் 2021

திமுகவில் ஐக்கியமான நாம் தமிழர் கட்சியினர்

செய்திப்பிரிவு

இரு மாவட்டச் செயலாளர்கள் உள்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 1,000 பேர் நேற்று திமுகவில் இணைந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி நாம் தமிழர் கட்சி, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை குறிவைத்து திமுகவில் சேர்க்கும் முயற்சியில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் ரா.ராஜீவ் காந்தி, மாநில மாணவரணிச் செயலாளர் சு.அமர்நாத், வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் மு.ரமேஷ் உள்ளிட்டோர் கடந்த 27-ம் தேதி திமுகவில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். திமுகவில் இணைந்ததும் ராஜீவ் காந்திக்கு செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் கட்சியின் வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் புருசோத்தமன், வழக்கறிஞர் பாசறை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் சங்கர், மத்தியசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கோடம்பாக்கம் பாபு ஆகியோர் தலைமையில் சிவகங்கை, திருவள்ளூர், மதுரை, வேலூர், ஈரோடு, கோவை, சேலம், தென்காசி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நாகை, தென்காசி,கடலூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாசறை பொறுப்பாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து பிறகு அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சஞ்சய் ராமசாமி தலைமையில் வழக்கறிஞர்கள் வெங்கடேஸ்வரலு, ஏ.வீராசாமி, கே.என்.ஸ்ரீராம், கே.திருஞானம் ஆகியோரும் நேற்று திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT