சேலத்தில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையை பெற்றுக் கொண்ட பெண்கள், முதல்வர் பழனிசாமி மற்றும் ஆட்சியர் ராமன், எம்எல்ஏ-க்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 
Regional01

மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய செயலியை சேலத்தில் முதல்வர் தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய வசதியாக, ‘சேலம் மதி’ என்ற செயலியை சேலத்தில் நேற்று முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு திருமண நிதியுதவியுடன், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 7,100 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், 35 பயனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் திட்டத்தில் 2011-2012 முதல் 2017-2018-ம் ஆண்டு வரை 38,575 ஏழைப் பெண்களுக்கு ரூ.136.03 கோடி திருமண நிதியுதவியும், 4 கிராம் தங்கம் வீதம் 1,54,300 கிராம் தங்கமும், 2017-2018 முதல் 2019-2020-ம் ஆண்டு வரை 16,400 ஏழைப் பெண்களுக்கு ரூ.62.28 கோடி திருமண நிதியுதவியும், 8 கிராம் தங்கம் வீதம் 1,31,200 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சேலம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான, ‘சேலம் மதி’ என்ற புதிய செயலியை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இச்செயலி பொதுமக்களுக் கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் இணைப்பு பாலமாக விளங்கும். இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள 470 மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்திப் பொருட்களான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த விற்பனை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை ‘சேலம் மதி’ செயலி மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிகழ்ச்சியில், சேலம் ஆட்சியர் ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், எம்எல்ஏ-க்கள் வெங்கடாசலம், மனோன்மணி, ராஜா, சித்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT