திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். 
Regional02

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் எடுப்பு பணி துரிதம் அமைச்சர் உதயகுமார் தகவல்

செய்திப்பிரிவு

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம்எடுப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் எடுப்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நீண்ட கால ஒப்பந்தத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தருகிறது. அந்த நிதியை பயன்படுத்தி தான் பல மாவட்டங்களில் புதிய நவீன மருத்துவமனை கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மிகபிரமாண்டமாக உருவாக்குவதற்காக ஜைக்கா நிறுவனம் கடன் தர முன்வந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசின் கோரிக்கை படி அருகில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நான்குவழிச் சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை தடைகளைத் தாண்டி அனைத்து சிறப்பு வசதிகளுடன் அமையும்.

திமுகவினர் நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான, வசீகரமான, பொய்யான திட்டங்களையே வாக்குறுதியாக கொடுக்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக அணியில் கடந்த தேர்தலில் இருந்த வெற்றி கூட்டணி தொடரும் என்றார் அவர்.

SCROLL FOR NEXT