தேர்தல் 2021

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி? ஆயிரம் விளக்கு, துறைமுகம் தொகுதியும் பரிசீலனை

எம்.சரவணன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியின் பிரச்சாரத்துக்கு திமுகவினர் முக்கியத்துவம் அளித்தனர். அத்தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2019 ஜூலை 4-ம் தேதி திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை, புதிய நிர்வாகிகள் நியமனம், பயிற்சி முகாம்கள் என்று தீவிர அரசியலில் களமிறங்கினார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் கடந்த நவம்பர் 20-ம் தேதி முதல் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

43 வயதாகும் உதயநிதி முதல் முறையாக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். திருவாரூரில் ஸ்டாலினும், சென்னை கொளத்தூரில் உதயநிதியும் போட்டியிடலாம் என்று ஸ்டாலினும், திமுக முக்கியத் தலைவர்களும் முதலில் நினைத்துள்ளனர். ஆனால், கொளத்தூரிலேயே மீண்டும் போட்டியிட ஸ்டாலின் முடிவு செய்திருப்பதால் உதயநிதிக்கான தொகுதியை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமையும், ஐ-பேக் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி ஸ்டாலின் பலமுறை போட்டியிட்டு வென்ற தொகுதி என்றாலும், 1984-ல் முதல்முதலாக ஆயிரம் விளக்கில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். எனவே, இங்கு போட்டியிட உதயநிதி விரும்பவில்லை என்ற கூறப்படுகிறது.

திருவாரூரில் போட்டியிட்டால் அடிக்கடி தொகுதிக்கு செல்ல முடியாது என்பதால் சென்னைக்குள் போட்டியிடவே உதயநிதி விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். 2011 பேரவைத் தேர்தலில் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் கொளத்தூர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது.

2011, 2016-ல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வென்ற ஜெ.அன்பழகன் இப்போது இல்லை. சிறிய தொகுதியாக இருப்பதால் பிரச்சாரம் செய்வது எளிது. எனவே, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் போட்டியிட உதயநிதி முடிவு செய்திருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குஷ்புவை எதிர்த்து நின்றால் தொகுதிக்குள்ளேயே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதில் சிக்கல் எழும் என்பதால், கருணாநிதி போட்டியிட்டு வென்ற துறைமுகம், சைதாப்பேட்டை, அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளை திமுக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT