தம்மம்பட்டி தெய்வீக மரச்சிற் பங்கள் விற்பனை மற்றும் கண்காட்சி சேலத்தில் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில், தெய்வீக மரச்சிற்பங்கள் வடிவமைப்பில் புகழ்பெற்றவையாக, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பி களின் படைப்புகள் உள்ளன. தம்மம்பட்டி மரச்சிற்பங்களின் மேம்பாட்டுக்காக, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையம் மற்றும் தம்மம்பட்டி மரச்சிற்பிகள் உற்பத்தி கம்பெனி ஆகியவை சார்பில், சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி வாசவி மண்டபத்தில், தெய்வீக மரச்சிற்பங்களின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில், வீட்டு வாயிற்படியின் மேல் வைக்கப் படும் கஜலட்சுமி சிற்பம், தசாவதார சிற்பம், பூஜையறையில் வைக்கப்படும் சுவாமி சிலைகள், விநாயகர், ஆஞ்சநேயர், நரசிம்மர், நடராஜர், வெங்கடாஜலபதி என பல்வேறு சுவாமிகளின் அழகிய சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுவாமி தேரில் பொருத்தக் கூடிய சிற்பங்கள், சுவரில் மாட்டக்கூடிய சுவாமி சிற்பங்கள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
விநாயகர் பல்வேறு இசைக் கருவிகளை வாசிப்பது போன்ற பல சிற்பங்களைக் கொண்ட, இசை வாயிற்தோரண சிற்பம், 2004-ம் ஆண்டு மாநில அரசின் பூம்புகார் விருது பெற்ற சுமார் ரூ.3 லட்சம் மதிப்பு கொண்ட நடராஜர் சிலை, உலகளந்த பெருமாள் சிலை போன்றவையும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
மரச்சிற்பக் கண்காட்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘தம்மம்பட்டி வட்டாரத்தில், ஏராளமான குடும்பத்தினர் பல தலைமுறைகளாக தெய்வீக மரச்சிற்பங்களை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் தேர் உள்பட தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கும் தேர் உருவாக்கிக் கொடுத்துள்ளோம். கண்காட்சி வரும் 20-ம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் தெய்வீக மரச்சிற்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது, என்றனர். ஏராளமான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டு சிற்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.