Regional01

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்.17-ல் 4 தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார த்துக்காக தமிழக முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் (பிப்.17) தூத்துக்குடி வருகிறார். அவர் 4 சட்டப்பேரவை தொகுதி களில் 6 இடங்களில் பேசுகிறார்.

முதல்வர் கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த ஜனவரி 3, 4 தேதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனவரி 3-ம் தேதி கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் முதல்வர் பிரச்சாரம் செய்தார்.

அவசரமாக சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், மற்ற நான்கு தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நான்கு தொகுதிகளிலும் முதல்வர் பழனிசாமி வரும் 17-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அன்று காலை 10.15 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதல்வர், 11 மணிக்கு வைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வைகுண்டத்தில் மக்கள் மத்தியில் பேசுகிறார்.

தொடர்ந்து பகல் 12 மணிக்கு திருச்செந்தூரில் மகளிர் குழு வினரை சந்தித்து கலந்துரையாடும் முதல்வர், பகல் 1 மணிக்கு ஆறுமுகநேரியில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி புதியம்புத்தூரில் பேசுகிறார். மாலை 6.30 மணிக்கு மாப்பிளையூரணியில் பேசுகிறார். இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

முதல்வர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT