Regional02

பால் உற்பத்தியாளர்களுக்கான ரூ.300 கோடி நிலுவை தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

‘மாநிலம் முழுவதும் 5.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் இருந்து ரூ.300 கோடி பால் நிலுவை தொகை உள்ளது. இதனை அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலின் போது, தனியார் பால் பண்ணைகள் பாலை வாங்க முன் வராத நிலையில், ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தது. தற்போது, 34 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அனைத்து பாலையும் ஆவின் நிர்வாகம் வாங்க வேண்டும்.

மக்காச்சோளம், வைக்கோல், சோளத்தட்டு, கடலை புண்ணாக்கு உள்ளிட்ட அடர் தீவனங்களின் விலை ஏற்றம் கண்டுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் செலவினங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பசும் பால் லிட்டருக்கு ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும், எருமை பாலுக்கு லிட்டருக்கு 35-ல் இருந்து ரூ.50 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் அளிக்கும் மாடுகள் 9 லட்சம் வரை உள்ளது.

மாநிலம் முழுவதும் 5.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் இருந்து ரூ.300 கோடி பால் நிலுவை தொகை உள்ளது. இதனை அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT